Thursday, December 27, 2012

கொல்லி வாய் பிசாசு !





" ருப்பங்காட்டு பக்கமா  இனிமே போக கூடாது "  என்று கூறிய  முத்தப்பா விற்கு உதறல் எடுத்தது .யாரோ  சொல்லக் கேட்டு  இவனும்  பயந்துள்ளான் .ராமநாதன் தைரியம் கொடுத்தான்  ' டேய்  இதெல்லாம்  மனப்ராந்தி டா " என்றான்
"
இல்லடா  வாயில  இருந்து தீ பிழம்பா  வந்ததுடா "  முத்தப்பா வின்  இதயம்  பட படத்தது . நடுக்கத்தில்  இருந்த  அவன்  உடல்  அப்போதே  சூடாகத்தான் இருந்தது . வீட்டில் யாரிடமும்   சொல்ல வில்லை ,இரண்டு தினங்கள்  கடை வீதிக்கு கூட  முத்தப்பா  வரவில்லை . விசாரித்ததில்  கடும் ஜுரம்  .இரு தினங்கள் பள்ளிக் கூடமும் செல்லவில்லை .

போன மாசம் கூட  இந்த மாதிரிதான்  உளறினான்  ஆனால்  அப்போது  இவன்  கொல்லி வாய் பிசாசு வை   பார்க்க வில்லையாம் . முனுசாமி   பையன்   காத்த முத்து  சொல்லித்தான்  தெரியும்  என்றான் . ஒருநாள்  சுடுகாட்டு  பக்கமா   கிட்டிபுள்   விளையாட  போனப்ப  காத்த முத்துவின்  அப்பா  எங்களிடம் சொன்னது ஞாபகம்  உள்ளது . பெண்  செத்துப்போனால்  பேய்  என்றும் ஆண் செத்துப்போனால் பிசாசு என்றும் கூறினார் .
ஆனால்  இந்த கொல்லிவாய்  பிசாசு எப்படி  உருவாகிறது  என்று மட்டும் சொல்லவில்லை .இதை கேட்ட பிறகும்  அங்கு கிட்டிபுள்  விளையாடச்செல்ல நாங்கள்  ஒன்றும்  கேனப்பய   இல்ல  என்றே  முத்தப்பா  சொல்லிவிட்டான் .
பூங்குடி  தோப்புல  கள்ளு  குடிக்க  போறவங்களுக்கு  பயமே  இருப்பதில்லை .பல தடவை  பார்த்துள்ளோம்  கள்ளு , சாராயம்  குடிக்கிற ஆளுங்க  கிட்ட  பேய்  பிசாசு  அண்டாதுன்னு  புளுகியதும் அவர்தான் .

ஒருநாள்  அன்னியூர்  தீமிதி  பாத்துட்டு  வரும்போது  சுடுகாட்டு வழியே வரவேண்டி  வந்தது .முத்தப்பா தான் சைக்கிள்  ஓட்டினான்  ,நான் பின்னால்  அமர்ந்து இருந்தேன் . சுடுகாடு  தாண்டும்  வரை கண்களை  இறுக்கமாக  மூடிக்கொண்டேன் .இருந்தாலும்  யாரோ எங்கள்  சைக்கிளை  பிடித்து  இழுப்பது போல்  உணர்ந்தேன் எல்லா  தெய்வங்களையும்  மனதில் நினைத்து   ,ஒரு வழியாக   வீடு  வந்து சேர்ந்தோம் .

       இது  நடந்து  சில நாட்கள்   கழித்து  முத்தப்பாவும் நானும்  கருப்பங்காடு  வழியாக  ஒரு நாள்  செல்ல நேர்ந்தது .மனதில்  தைரியத்தை வரவழைத்து க்கொண்டு  நடந்தோம் .தூரத்தில் யாரோ? இருவர்  நடப்பது தெரிந்தது .  ஐயோ  பேயும்  பிசாசும்  சேர்ந்து போகிறதே  என்று  கை கால் உதறலுடன்  பார்த்தால்  முனுசாமியின்  மூத்த மகன்  பாண்டியனும்    கடைசி வீட்டு சாந்தி   அக்காவும்  கருப்பங்காட்டுப்பக்கம் ஒதுங்குவது  தெரிந்தது .  நான் முத்தப்பாவிடம்  சப்தமில்லாமல் சொன்னேன்  " டேய்  கொல்லி வாய் பிசாசு  டோய்  வா  திரும்பிபோயிடலாம்"  ! .

Monday, December 10, 2012

எல்லாம் ஒரு டைம் தான் !

மீப காலமாக ராமநாதனிடம்  யாரும் டைம் என்ன?  என்று கேட்பதில்லை.காரணம்  எப்போது  யார்  டைம்  கேட்டாலும் தவறான  நேரத்தை தான்  கூறுவான் .இது  அவன் குற்றமல்ல ராமநாதனுக்கும்  கைக்கடிகாரத் திற்கும்  உள்ள ராசி அப்படி . பல கைக் கடிகாரங்களை மாற்றிய பிறகும்  இதே நிலை .நண்பர்களின்  கிண்டல்  இது தான் "அவன்  டைம்  சரியில்லப்பா ! "
அந்த  பள்ளிக்கூடத்தில்  முதன் முதலாக ஒரு மாணவன்  கையில்  கைக்கடிகாரம்   இருந்தது  என்றால் ,அது எட்டாம்  வகுப்பு  படிக்கும்  ராமநாதன்  கையில்  கட்டியிருந்தது தான் . அந்த முதல்  எலக்ட்ரோனிக்  கடிகாரம்
ஒரு மணி நேரத்திற்கு  8 நிமிடங்கள்   குறைவாக ஓடியது . உணவு  இடைவேளை  ,வகுப்பு முடியும்  நேரம்  இவை  அனைத்தும்  ராமநாதன்  கடிகாரம்  மூலமாக  தெரிந்து கொள்வோம் .
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு  நேரம் தெரிந்து கொள்வது சிரமமாக  இருந்தபோதும்   வகுப்பில் சூரிய ஒளியின் வெயில்   வட்டம் மூலம்  உணவு  இடைவேளை  யை  தெரிந்து வைத்திருந்தனர் .
          சில ஆண்டுகள் முடிந்து   ஒருநாள் ராமநாதனை  பார்த்தேன் .திருப்பூரில்  பனியன் கம்பனியில  வேலைக்கு போவதாக கூறினான் .கையில்  ஒரு புதிய  கோல்ட் வாட்ச்  கட்டியிருந்தான் . நேரம்  சரியாக  காண்பிக்கிறதா ?  என்று கேட்டேன் . இது  ஆட்டோமாடிக்  வாட்ச்  வாரத்துக்கு  10 நிமிடம்  கூடவோ  குறையவோ  செய்யும்  என்றான் .
+2 படித்து  முடித்த  நேரத்தில்  ராமநாதன்   சில பெண்களின்  வழியில்  பின் தொடர்வதுண்டு  பிறகு சொல்லுவான் , " காதல் எல்லோருக்கும் வந்துடாது டா " என்று .   இப்போ  திடீரென்று   கம்பெனியில கூட வேலை பார்க்கும்  ஒரு பெண்ணை காதலிப்பதை  சொன்னான் .

அதிசயமாக  ராமநாதனின் காதலை  எவரும்  எதிர்க்கவில்லை .அதில் எனக்கொரு கவலையுமில்லை .ஒரு சுபதினத்தில் ஒரு நல்ல நேரத்தில் ராமநாதன் திருமணம்  நடந்தேறியது .நண்பர்கள் சேர்ந்து ஒரு நல்ல  TITAN   கை கடிகாரம் பரிசளித்தார்கள் .
ஒவ்வொரு  காதலும் இவ்வாறு  வெற்றி யடைந்தால்  எப்படியிருக்கும் .நண்பர் வீரபாண்டியன் அவரது காதலுக்கு மற்ற சில நண்பர்கள் எதிர்த்தார்கள் கடைசியில் வெற்றி யடைந்தார் .நான்  கண்ட  காதலர்களில்  பலரது காதல் வெற்றி  யடைந்து உள்ளது .பலரது ஒருதலைக் காதல்  பரிதாபமானது .
ராமநாதன் திருமணம் முடிந்து சரியாக ஒரு ஆண்டு நெருங்கும் வேளை .அன்று அதிகாலை  ராமநாதன் வெறும் சடலமாக தான் கிடந்தான் .கடந்த ஒரு மாதமாக மனைவி யுடன் தினமும்  சண்டை .கடைசி யில் தற்கொலை செய்துகொண்டான் .இப்போதும்  அவன்  கையில்   அதே  கடிகாரம்   நேரம் சரியாக  10 மணி காண்பித்தது .அந்த நேரம் எல்லோருடைய  கடிகாரத்திலும்   10 மணி தான் .!!

Tuesday, November 27, 2012

திருட்டு ஆப்பிள்

நான் ஓமன்  நாட்டில்  மசிராஹ் வில் இருந்தபோது ஒரு பிரபலமான   மீன் கம்பெனியில்  வேலை பார்த்து வந்தேன் .அந்த நாட்களில்   பாலைவன  தேசத்தில்  ஒரு  வசந்த  கால அனுபவம் ஏற்பட்டது அதுதான்  முதலாளி யின்  மகள் திருமணம் . திருமணத்தை  முன்னிட்டு  முதலாளி யின் குடும்பம்  கோலாகல  கொண்டாட்டத்திற்கு தயாரானது .
அந்த  கிராமத்தின்  அணைத்து  மக்களும்  கொடுப்பதற்காக  டன் கணக்கில் பழங்களும் ,அல்வா  முதலான  பலகாரக வகைகள் கொண்டு  வந்து இறக்கினர் .இவற்றை  வைப்பதற்காக  எங்கள்  குடியிருப்பின்  கடைசி வீட்டை  தேர்ந்தெடுத்து இருந்தனர் .அந்த வீட்டில்  யாரும் குடியிருக்க வில்லை ,காரணம்  A /C  வசதி  இல்லாமல் இருந்தது .
நாங்கள்  பதினைந்து பேரும்  சேர்த்து தான்  இவற்றை  இறக்கினோம் ,ஆனால் எங்களுக்கு  ஒரு பழம்  கூட அந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை .ஒரு கூடை  ஆப்பிள்  அரபிக்கார டிரைவர்க்கு  தெரியாமல்  மாற்றி வைக்க  சமையல்காரன்  செய்த முயற்சி  தோல்வியில்  முடிந்தது .புத்திக்கு  எட்டியது  கைக்கு எட்டவில்லை .
ஆனாலும்  இவ்வளவு  தின்பண்டம்   கண்டு விட்டு ,உண்ணமுடியாமையால்  எனக்கு உறக்கமே  இல்லை .என் வாழ்வில்  இவ்வளவு  பழங்களை  நேரில் காண்பது  இதுவே முதல் முறை என்ற உண்மையை இங்கு வெளிப்படுத்துவதில் எனக்கு  வெட்கம் இல்லை .இரவு 11 மணி ,அனைவரும்  உறங்கியிருப்பர்கள் என்று  நானே  நினைத்துக்கொண்டேன் .எனது  அறையிலிருந்து  வெளியே வந்து  பழங்கள் இருந்த  அறையை  நோட்டம் விட்டேன் .எனது அறைக்கு  அடுத்த அறையாக  இருந்ததை  இப்போது  நினைத்து  பெருமை பட்டுக்கொண்டேன் . அந்த  அறையை  நோக்கி மெல்ல நடந்தேன் .அறையின் வலது புறத்தில்  விண்டோ  ஏசி  இருந்த அடையாளம்  மட்டுமே  உள்ள  துவாரத்தை  கண்டேன் . அதன் வழியாக தாவிக்குதித்தேன் . எனக்கு  மிகவும்  விருப்பமான  பச்சை  ஆப்பிள் கூடை  ஒன்றை  தூக்கி  ஏசி துவாரத்தில்  வைத்தேன் .பின்னர்  நானும் அதன்வழியாக  வெளியேறினேன் .அப்போது முதுகில்  ஒரு கீறல்  துவாரத்தின்  மேல் பக்கம் இருந்த  ஒரு ஆணிதான்  காரணம் .
மறுநாள்  சில ஆப்பிள்களை  நான் சாப்பிட்டுவிட்டு   பக்கத்துக்கு  அறை  நண்பர்களுக்கு  10 ஆப்பிள்களை  கொடுக்க சென்றேன் . அவர்களது  கட்டிலின் கீழ்  ஆரஞ்சு  கூடை இருப்பதைக் கண்டேன் .மற்றொரு அறையில்  இதுபோல்  சென்றபோது  அல்வா  இருப்பதைக்கண்டேன் . மனதில் ஒரு சந்தோஷம்  ,திருடியது நான் மட்டுமல்ல .எனக்குப் பிறகும் சிலர் .ஆக  எல்லா பதார்த்தங்களும்  எங்களுள்  பண்ட மாற்று முறை ஆனது .திடீரென்று  நினைத்துப் பார்த்தேன்  மற்றவர்  முதுகை  தொட்டுப்பார்க்க  வில்லையே.. ! .

Wednesday, November 21, 2012

அந்த இனிய நாட்கள்

நமது  வாழ்வில்  ஒரு  கவலையும்  இல்லாத  அந்த  பள்ளிப்பருவம் எவ்வளவு  இனிமையானது  என்பதை இப்போது தான்  உணர முடிகிறது .அடுத்த வேளை  உணவு  முதல்  அணைத்து  தேவை களுக்கும்  ஒரு கவலையும்  கொள்ளத் தேவை இல்லை .ஆனால்  அன்றைய  நாளில்  எதோ  ஒரு காரணம்   நாம்  வளரவேண்டும்  என்று  மட்டும்  மனதில்  ஏக்க மாக இருக்கும். இக்கவலை  எனக்கு  மட்டும் தானா ? என்று சில சமயம்  யோசித்து  பார்ப்பேன் .
5 ஆம் வகுப்பு  படித்த போது  வேளாங்கண்ணி  இன்ப சுற்றுலா சென்றது  இப்போதும்  நினைவில்  உள்ளது. நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ,உப்பு  காய்ச்சுவது தான் அது .பலர் சொல்லக்கேட்டுள்ளேன் கடல் நீரிலிருந்து  உப்பு  காய்ச்சு வதைப்பற்றி .எனவே  வேளாங்கண்ணி சுற்றுலா  சென்ற பொது  யாருக்கும் தெரியாமல் கடல் நீரை  ஒரு பாட்டிலில் எடுத்து வந்து  உப்பு தயாரித்து பார்த்தேன் .அதை இப்போது  நினைத்துப் பார்கையில்  நகைப்பிற் குரிய தாக இருக்கிறது .
இதுபோல் பல நினைவுகள்  இருந்தாலும்  ஒரு  நிகழ்வை மட்டும் இங்கே  தெரிவிக்கிறேன் .எங்கள்  வீட்டில் கோவைக்காய் கொடி  வளர்ந்து இருந்தது .கோவை இலையை பறித்து கட்டு கட்டி  பள்ளியில்   விற்பனை செய்வேன் ,ஒரு சிலேட் குச்சிக்கு  ஒரு  கட்டு  கோவை இலை  என்று . காரணம்  கோவை இலையை கொண்டுதான்  சிலேட்டில்  உள்ள  எழுத்துக்களை  அழிக்க  பயன்படுத்துவோம் .
ஒருநாள்  அவ்வாறு  கோவை இலையை  விற்கும்போது  கலிய மூர்த்திக்கும்   எனக்கும் சண்டை வந்து விட்டது . அவன் என்னை  கடித்து விட்டான் .பிறகு  நான் அழுது கொண்டே  வீட்டிற்கு  வந்தேன் .
      மறுநாள்  என் தந்தை  கலியமூர்த்தியின் தந்தையிடம்  புகார்  செய்தார்   கீழ் கண்டவாறு
     " உன் பையன்  கலிய மூர்த்தி  என் பையன  கடிச்சு புட்டன்யா "  என்று .அதற்க்கு  கலிய மூர்த்தியின் தந்தையோ  " என்னப்பண்றது யா ? சின்னப்புள்ளைங்க தானே   நாய் கடித்தால்  திருப்பியா ? கடிப்போம் !  அந்தமாதிரி  நினைச்சுக்கோ '  என்று .
அதற்க்கு எனது  தந்தையின்   மறுமொழி  இவ்வாறு  இருந்தது " சரி சரி  என் புள்ளைக்கு  தொப்புள  சுத்தி   ஊசி  போட்டுக்கறேன் "!!