Thursday, March 21, 2013

பாம்பாயி



"ட்டிக்கிரியா "
"சொல்லு !  என்ன கட்டிக்கிரியா " இப்படி ஒரு  குரல்   திடீரென்று  வரும்போது  யாராக இருந்தாலும்  திடுக்கிட்டு போவார்கள் . பாம்பாயி  என்ற 22 வயசு  பெண்ணின் குரல் தான் அது . பாம்பாயி 12 வயசு முதல்  அனாதையாகத்தான்   திரிகிறாள் .பல ஆண்டுகட்கு முன்  ஊர் காவலாளியாக நேப்பாளி   ஒருத்தன் அய்யம்பேட்டையில்   இருந்தான் .அவனுக்கு குடும்பம்  என்று ஒன்று உள்ளதா ? என்று  ஊரார்   சந்தேகப்பட்டனர் .காரணம்,அவன்  இங்கு வந்த பிறகு  நேபாள்  செல்லவே இல்லை . அங்கு  செல்ல  ஆர்வமும் இல்லை .
மதுரைவீரன் சாமி  கோயில்  பக்கத்துல   அவனுக்கு  ஊராரால்  ஒதுக்கப்பட்ட  இடத்தில  குடிசை போட்டு இருந்தான் .எப்படியோ  அவனுக்கு  ஒரு காதல்  ,பின்னர்  திருமணம்  பின்  பிறந்தவள் தான்  பாம்பாயி.
பிறந்தது  முதல்  பாம்பாயி க்கு மூளை  வளர்ச்சி  குறைவாக இருந்தது , இருந்தாலும்  அவளும்  இவ்வளவு  வளர்ந்து விட்டாள் .மூளை வளர்ச்சி  குறைந்தாலும் உடல்  வளர்ச்சியை  யாரால் தடுக்க இயலும் .நேப்பாளி யின் மனைவி  நோய்வாய்  பட்டு இறந்தபின் ,நேப்பாளி யும்  எங்கோ  ஓடிவிட்டான் .

           சோமநாதன்  பால் பண்ணையில்  சாணி  அள்ளுவதும் ,மாடுகளை  குளிப்பாட்டுவதும்  பாம்பாயி தான் .வேலை  முடிந்தாலும்  முடியாவிட்டாலும் ,எதாவது  மூலையில் நின்று கொண்டு வெற்றிலையை  குதப்பிக்கொண்டு  யாரிடமாவது "கட்டிக்கிரியா "  என்று  கூச்சல்  போடுவாள் .தினமும்  பார்ப்பவர்களுக்கு  இது  ஒரு  விஷயமே  இல்லை . வெட்டி சோலி   பசங்க   அவ்வப்போது   லேசாக  இவளை  சீண்டுவதும்  உண்டு . ஆனால்  சீரியசாக   ஒருவரும்  இவளை  தீண்டுவது இல்லை .ஏன் என்று கேட்க்க  ஆள் இல்லை என்றாலும்  தப்பு தண்டா  ஏதேனும்  ஆனால்  ஊரில்  கட்டி வச்சிடு வாங்களோ ? என்ற பயம் தான் .
வயசு  பசங்க  சிலர்  காதலில்  மூழ்கி இருக்கும்போது  சிலருக்கு காதலிகள்  கிடைப்பதில்லை  அவ்வாறான சமயங்களில்  ஒருவரை ஒருவர் கலாயிப்பதுண்டு  " மாப்ள  !  ஒரு பொன்னும்  செட்டாகலன்னு  வருத்தப்படாத "  " பாம்பாயி  இருக்காடா"  என்று
 இளம் பருவத்தில்  காதலில்  வீழாதவர்   அரிது தான் . அப்படி இருந்தாலும்  ஒருதலை  காதலாவது  இல்லாமலா இருக்கும்
 சொந்த  பிரச்னை  ஆயிரம் இருக்கும்போது  அய்யம்பேட்டை பற்றி  சிந்திக்க  ஏது  நேரம் கோயம்புத்தூரில்  செட்டில் ஆகிவிட்ட  எனக்கு   ஒரு கஷ்டம் என்று  வந்த பிறகு  சுவாமிமலை  அருகில்    இருந்த 10 சென்ட் பூமி தான்  உறுத்தியது . "சரி சரி  அத  வித்துபுட்டு  கடன  அடைக்கிற வழிய பாரு " என்ற மனைவியின்  கூப்பாடுதான்  மனதில்  ஓடியது .

சரியாக இருபது  வருடம்  கடந்து   அய்யம்பேட்டை வந்துள்ளேன் .    ஒரு ஆட்டோவை  அழைத்து  அதில்  ஏறி   பச்சையப்பா  வீதிக்கு போ  என்று விரட்டினேன்.
"கட்டிக்கிரியா "
திடுக்கிட்டேன்    " அட ! பாம்பாயி !  "
"கட்டிக்கிரியா  ! ,  என் மகள !!

Saturday, February 9, 2013

வடக்குப்பட்டி ராமசாமி

என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது  பண்ணிட்டாங்களா ?" டீ  குடித்தபடி  சிங்கப்பூரான்  வீரமுத்து  பேச்சை  தொடங்கி வைத்தார்,கமால்பாய்   டீக்கடை  கலகலத்தது  .

ராமசாமி   வளர்த்து வந்த  ஒரு  ஆட்டு குட்டிக்கு நோய்  வந்துடிச்சு . உள்ளூரில்  யாரிடமும்  இந்த  ஆட்டை  விற்க முடியாது .இந்த ஆட்டின்   கறி  ஒன்னுத்துக்கும்  தேறாது என்று  ஆடு வெட்டும்  குட்டிபாய்  சொல்லிவிட்டார் .என்ன  செய்வது  என்று  தெரியாமல்  ராமசாமி  குழப்பத்தில்  இருந்தார் .இந்த நேரத்தில்  அங்கு வந்த  முத்தப்பா  ' ராமசாமி  ஒரு  குவார்ட்டருக்கு  ஏற்பாடு பண்ணுயா ' என்றார் . 'நானே  நொந்து  போயிருக்கேன்  நீ வேற   கடுப்ப கிளப்பாத ' என்றான்  ராமசாமி . விஷயம் அறிந்த  முத்தப்பா  ஒரு  ஐடியாவ  எடுத்து விட்டார் . ராமசாமி  நீ  என்ன பண்ற  நைசா  ஆட்ட  ஓட்டிட்டு  மெயின் ரோடு  பக்கம்  வா .

முத்தப்பா வின்  ஆலோசனைப்படி  மெயின்  ரோட்டின்  ஓரமாக  ஆட்டை  கொண்டு வந்தார்  ராமசாமி . அது  மாலை  நேரமாக இருந்தது  இன்னும்  சற்று  நேரம்   ஆனால்  இருட்ட தொடங்கிவிடும் .யாருக்காகவோ  வெகு நேரம்  காத்திருந்தனர் .ஒரு கட்டத்தில்  ராமசாமி  பொறுமை இழந்து  கோபப்பட்டார் . இடை இடையே  இந்த  ஆடு  படுத்துக்கொள்ளும் .அதை எழுப்பி  நிற்க வைக்க  படாத பாடு பட்டார் .
சற்று  தூரத்தில் சரக்கு லாரி  வருவது  தெரிந்தது . முத்தப்பா  அவசரமாக   ஆட்டை  விரட்டினார் . இவர்கள்  திட்டமிட்டது போல்  ஆடு  லாரியில்  அடிபட்டு   சிதைந்தது . இருவரும் சுதாரித்து   லாரியை  மடக்கினர் .
  
ராமசாமியின்  பாக்கியம்  கர்நாடக காரன்  லாரியாக  இருந்தது  முத்தப்பா வின் நண்பர்களும்  கூடி  கட்ட பஞ்சாயத்து  தொடங்கியது .முடிவில்  மூவாயிரம்   இழப்பீடாக  கிடைத்தது . முத்தப்பா அன் கோ  500 ரூபாய் பெற்றுக்கொண்டு  நடையை   கட்டியது .

மறுநாள் கும்பகோணம்  சென்று   ஒரு  கடையில்  சாமான்  வாங்கும்போது  மாட்டிக்கொண்டார் . அடப்பாவிகளா  கர்நாடக  லாரிக்காரன்  கொடுத்த மூவாயிரதுல  இருந்த 2  ஆயிரம்  ரூபா  நோட்டும்
கள்ள நோட்டாம்ல !

Monday, December 31, 2012

நடுவுல ஓர் எழுத்தை காணோம்



சிங்கப்பூரான்  வீரமுத்து  என்றால்  எல்லோருக்குமே  தெரியும் . ஆனால்  வீரமுத்து  சிங்கப்பூர்  சென்றது  கிடையாது .அனுதினம்  ஏதாவது ஒரு  சந்தர்ப்பத்தில்  யாரிடமாவது  சிங்கப்பூர்  பொருட்களைப்பற்றி  பேசாமல்  இருந்தது கிடையாது .ஒரு நாள் என்னிடம்  முதன் முதலாக  சிங்கப்பூர்  வேட்டி யை குறித்து  பேச்சை  தொடங்கினார் .ஒரு வேட்டியை  என்னிடம் காண்பித்து  அவரிடம் இதுபோல்  ஐந்து  சிங்கப்பூர்  வேட்டி இருப்பதாக கூறினார் .நல்ல விஷயம்  தான்  ஆனால் அவர்  இவ்வாறு  கூறுவது  என்னிடம் மட்டும் அல்ல .ஊர்  பொதுமக்கள்  யாராக  இருந்தாலும் இப்படி   அவர்  வாங்கிய பொருட்களைப்பற்றி   எடுத்து  விடுவார் .
                      ஒருநாள் கமால் பாய்  கடையில்   டீக்குடிக்க சென்றபோது  அவர்  கட்டியிருந்த சிங்கப்பூர் பெல்ட் ஐ பற்றி  பெருமிதமாக பேசினார்  நான் அதை  ஆமோதித்து  அதிசயித்து  புகழ்ந்து  பேசினேன்  .அதன்  பலனாக  நான்  குடித்த டீக்கும் அவர்  காசு கொடுத்தார் ,அவரது  புதிய சிங்கப்பூர் பெல்டில் இருந்து  காசை  எடுத்தார். இவர்  விடும்  கதைகளை  கேட்டு  எனக்கும் சிங்கப்பூர்  செல்ல வேண்டும் என்ற  ஆவல் இருந்தது .ஆனாலும் சிங்கப்பூரான்  வீரமுத்து வுக்கு  இந்த  பொருட்கள்  எப்படி  கிடைக்கிறது  என்பதை  அறிய  ஆவலாக இருந்தேன் . அவரிடம்  ஒருமுறை இதுபற்றி கேட்டபோது  அய்யம்பேட்டையில  உள்ள மச்சான்  வாங்கி தந்ததாகவும் ஒவ்வொரு ஐட்டமும்  விலை அதிகம் என்று மட்டுமே சொன்னார் .
        எனக்கு நன்றாக  நினைவு  உள்ளது  1991 மே 22  தினசரிகளில்  தலைப்பு செய்தி   ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். கமால் பாய்  கடையில்  பெரும் கூட்டம்
அன்று வீரமுத்து  பலருக்கும்  டீ   உபயம்  கொடுத்தார் .அன்று  புதிய  சிங்கப்பூர் கை கடிகாரம் அணிந்து வந்திருந்தார் . ராஜீவ் காந்தி  இறந்த  சோக செய்தியில்   வீரமுத்துவின்  புதிய  கடிகாரத்தை  யாரும் சட்டை செய்யவில்லை .எனக்கு  மட்டும் பிடித்திருந்தது .தூரத்தில் இருந்து  அந்தோணிராஜ்  முறைத்துக் கொண்டிருந்தார் .அவருக்கும் வீரமுத்து வுக்கும் ஆகாது  .ஒருமுறை  சிங்கப்பூர் லுங்கி  தருவதாக  கூறி ஏமாற்றிவிட்டார்  அந்த கடுப்புதான் .
ஒருநாள் என் தந்தை  அய்யம்பேட்டைவரை  சென்று  சிங்கப்பூர்  வேட்டி  வாங்குவதற்காக   வீரமுத்து வின் மச்சானை  பார்க்கசென்றார் .அங்கு  சென்று  அவரை  சந்தித்து  ஒரு வேட்டி யும் கோடாலி தைலமும்  பெற்று வந்தார் .கூடவே  ஒரு உபரி தகவலும்  கொண்டுவதார்  அது   அவர்  வீரமுத்து  வின் மச்சான்  அல்ல என்பதே .
    அன்றைய  தினம்  அந்தோணிராஜ் தன்  அன்பிற்குரிய  ஒருவருக்கு  இடிமுடி  வாங்கி வந்திருந்தார் .அவரும்  அய்யம்பேட்டை சென்று  சிங்கப்பூர் புரோக்கரிடம்  தான் இதை  வாங்கி வந்திருந்தார் .நேராக  கமால் பாய்  கடைக்கு  வந்தார்  அங்கே  வீரமுத்து  தன்னுடைய சிங்கப்பூர் ஜட்டி  குறித்து என்னுடன்  பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்  .அப்போது அங்குவந்த  அந்தோணிராஜ்  வீரமுத்து விடம்  அதை காண்பித்து  " இத  பாருயா    ம_ரு!  இது  சிங்கப்பூரு  ம_ரு !"   என்றார் .

Thursday, December 27, 2012

கொல்லி வாய் பிசாசு !





" ருப்பங்காட்டு பக்கமா  இனிமே போக கூடாது "  என்று கூறிய  முத்தப்பா விற்கு உதறல் எடுத்தது .யாரோ  சொல்லக் கேட்டு  இவனும்  பயந்துள்ளான் .ராமநாதன் தைரியம் கொடுத்தான்  ' டேய்  இதெல்லாம்  மனப்ராந்தி டா " என்றான்
"
இல்லடா  வாயில  இருந்து தீ பிழம்பா  வந்ததுடா "  முத்தப்பா வின்  இதயம்  பட படத்தது . நடுக்கத்தில்  இருந்த  அவன்  உடல்  அப்போதே  சூடாகத்தான் இருந்தது . வீட்டில் யாரிடமும்   சொல்ல வில்லை ,இரண்டு தினங்கள்  கடை வீதிக்கு கூட  முத்தப்பா  வரவில்லை . விசாரித்ததில்  கடும் ஜுரம்  .இரு தினங்கள் பள்ளிக் கூடமும் செல்லவில்லை .

போன மாசம் கூட  இந்த மாதிரிதான்  உளறினான்  ஆனால்  அப்போது  இவன்  கொல்லி வாய் பிசாசு வை   பார்க்க வில்லையாம் . முனுசாமி   பையன்   காத்த முத்து  சொல்லித்தான்  தெரியும்  என்றான் . ஒருநாள்  சுடுகாட்டு  பக்கமா   கிட்டிபுள்   விளையாட  போனப்ப  காத்த முத்துவின்  அப்பா  எங்களிடம் சொன்னது ஞாபகம்  உள்ளது . பெண்  செத்துப்போனால்  பேய்  என்றும் ஆண் செத்துப்போனால் பிசாசு என்றும் கூறினார் .
ஆனால்  இந்த கொல்லிவாய்  பிசாசு எப்படி  உருவாகிறது  என்று மட்டும் சொல்லவில்லை .இதை கேட்ட பிறகும்  அங்கு கிட்டிபுள்  விளையாடச்செல்ல நாங்கள்  ஒன்றும்  கேனப்பய   இல்ல  என்றே  முத்தப்பா  சொல்லிவிட்டான் .
பூங்குடி  தோப்புல  கள்ளு  குடிக்க  போறவங்களுக்கு  பயமே  இருப்பதில்லை .பல தடவை  பார்த்துள்ளோம்  கள்ளு , சாராயம்  குடிக்கிற ஆளுங்க  கிட்ட  பேய்  பிசாசு  அண்டாதுன்னு  புளுகியதும் அவர்தான் .

ஒருநாள்  அன்னியூர்  தீமிதி  பாத்துட்டு  வரும்போது  சுடுகாட்டு வழியே வரவேண்டி  வந்தது .முத்தப்பா தான் சைக்கிள்  ஓட்டினான்  ,நான் பின்னால்  அமர்ந்து இருந்தேன் . சுடுகாடு  தாண்டும்  வரை கண்களை  இறுக்கமாக  மூடிக்கொண்டேன் .இருந்தாலும்  யாரோ எங்கள்  சைக்கிளை  பிடித்து  இழுப்பது போல்  உணர்ந்தேன் எல்லா  தெய்வங்களையும்  மனதில் நினைத்து   ,ஒரு வழியாக   வீடு  வந்து சேர்ந்தோம் .

       இது  நடந்து  சில நாட்கள்   கழித்து  முத்தப்பாவும் நானும்  கருப்பங்காடு  வழியாக  ஒரு நாள்  செல்ல நேர்ந்தது .மனதில்  தைரியத்தை வரவழைத்து க்கொண்டு  நடந்தோம் .தூரத்தில் யாரோ? இருவர்  நடப்பது தெரிந்தது .  ஐயோ  பேயும்  பிசாசும்  சேர்ந்து போகிறதே  என்று  கை கால் உதறலுடன்  பார்த்தால்  முனுசாமியின்  மூத்த மகன்  பாண்டியனும்    கடைசி வீட்டு சாந்தி   அக்காவும்  கருப்பங்காட்டுப்பக்கம் ஒதுங்குவது  தெரிந்தது .  நான் முத்தப்பாவிடம்  சப்தமில்லாமல் சொன்னேன்  " டேய்  கொல்லி வாய் பிசாசு  டோய்  வா  திரும்பிபோயிடலாம்"  ! .